இன்று உனக்கு ஒரு வயது பிறந்த நாள்.
நண்பர் உறவினர் என கூட்டம் கூட தொடங்கியவேளை... நான் பரபரப்பாக இறுதி கட்ட ஏற்பாடுகளை கவனித்தேன். ஏதோ நான் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்வதை போல ஓர் உணர்வு. உலகம் சுழல்வதை விட வேகமாக நான் சுழன்றுகொண்டிருந்தேன். ஆனால், என் பார்வை முழுவதும் உன் மேல் மட்டுமே ஒட்டியிருந்தது.
உன்னை சில நேரம் பாட்டி தூக்கிவைத்திருந்தாள். அத்தை அள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா சிரிப்பு மூட்டினார். நீ மிகவும் மகிழ்ந்து அவர்களையே சுற்றி சுற்றி வந்தாய். எனக்குள் திடீரென ஒரு ஏக்கம். நீ என்னை தேடவில்லை!
ஏன் என் மகன் என்னை அதிகம் நாடுவதில்லை? தூங்கும் போது கூட "பாட்டி ... பாட்டி..." என நடு இரவில் அழுவாய். உன்னை கொண்டு சென்று பாட்டியிடம் கொடுத்துவிடுவேன். அங்கே அவர் அறையில் தான் தூங்குவாய். "நான் இல்லாமல் என் மகன் தூங்க மாட்டான்" என சில தோழிகள் சொல்ல கேட்டிருக்கிறேன், இது என் வாழ்வில் நடக்க போவதே இல்லை என நான் மனதளவில் குமுரியது தான் மிச்சம்
சில முறை, உன்னை வலுக்கட்டாயமாக என்னுடன் தூங்க வைக்க முயல்வேன். பல மணி நேரம் தூங்காமல் அழுதுகொண்டே இருப்பாய். கடைசியில் , வேறு வழியின்றி, உன் பாட்டியிடமே உன்னை விட்டு வருவேன். உன் அழுகை நின்றுவிடும்! என் விசும்பல் தொடங்கிவிடும்!
ஏன்!? ஏன், என் மகனுக்கு என்னை பிடிக்க வில்லை? .. ஏன் என்மேல் அவனுக்கு ஈர்ப்பு இல்லை என உன் அப்பாவிடம் கேட்டால் .. நானே இப்படி கற்பனை செய்துக்கொள்வதாக கூறுவார்.
ஒரு வேளை நான் உன்னை அறுவை சிகிச்சை மூலமாக பெற்றதால் தான் உனக்கு என் மேல் அதிக ஈடுபாடு இல்லாமல் போய் விட்டதோ ..? இயற்கையான முறையில் ஈன்றால் தான் தாய் சேய் உறவு நெருக்கமாக இருக்கும் என ஒரு தோழி சொன்னது நினைவில் வந்தது.
இது எந்த வகையில் உண்மை என எனக்கு தெரியவில்லை, உண்மையா ... பொய்யா ... என ஆராயவும் எனக்கு தோன்றவில்லை. ஆனால் உன்னை இயற்க்கையான முறையில் தான் ஈன்றெடுக்க வேண்டும் என உறுதியாய் இருந்தது என் மனம். எந்த வகையிலும் அவள் சொன்னது உண்மை ஆகிவிடக்கூடாது என்பதால் !... நாம் நினைப்பது ஒன்று, காலத்தின் கட்டாயத்தில் நடப்பது ஒன்று! ... அருவை சிகிச்சயில் தான் நீ பிறந்தாய்...
உன்னை நான் தூக்கி வைத்து கொஞ்சும் போது, உன் அப்பாவை பார்த்ததும் அவரிடம் தாவிடுவாய். சட்டென என் மனம் கனத்துவிடும். ஒரு முறை கூட அப்பாவின் கையிலிருந்தோ, உன் பாட்டியில் மடியிலிருந்தோ நீ என்னை கண்டதும் தாவியதே இல்லை. சிரிப்பாய், ஏதேதோ மழலை மொழி சொல்வாய்.. ஆனால் என் மனம் என்னவோ அதிருப்தியில் வாடிதான் இருக்கும்.
இன்று உனக்கு ஒரு வயது பிறந்த நாள். வந்த அனைவருமே உன்னை தூக்கினர், கொஞ்சி மகிழ்ந்தனர். நீ யாரையும் கண்டு அழவே இல்லை. சிரித்து சிரித்து அனைவரையும் கவர்ந்தாய். எங்கே நீ பயந்து விடுவாயோ, அழுதிடுவாயோ என உன் அருகிலேயே நானிருந்தேன். நீ அழவே இல்லை. பிறரிடம் பயம் இல்லாமல் அவர்களிடம் நீ ஒட்டிக்கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. சில குழந்தைகளைப் போல, மற்றவர் தூக்கியதும்... அதைப் பிடிக்காமல், தன் தாயை நோக்கி கை நீட்டி அழும் குழந்தையாய் நீ இல்லையே என எனக்கு கடுப்பு தான் வந்தது. யாரோ ஒருவரிடம் நீ காட்டும் அந்த நெருக்கம், என்னை உனக்கு ஞாபகப் படுத்தாதை எண்ணி சிரிது கலங்கினேன்.
கூட்டம் அதிகமானது. உனக்காக பல பரிசு பொருட்கள்...அவற்றில் சில பொம்மை வண்டிகளும், சைக்கிள்களும் இருந்தன. பிற குழந்தைகள் அதனை எடுத்து விளையாட, நீ அதை கண்டு சிரித்தாய். என் வண்டி, என் பொம்மை என நீ அவர்களை தடுக்கவில்லை. கை தட்டி சிரித்து ... உன் முகம் அன்றலர்ந்த தாமரையாய் தெரிந்தது எனக்கு. உன்னை விளையாடவிட்டு, சற்று நேரம் என் தோழிகளுடன் நலன் விசாரிதுக்கொண்டிருந்தேன்.
குழந்தைகளின் ஆரவாரம் ..பெரியவர்களின் பேச்சு என எங்கும் சத்தமாகவே இருந்த்து. அவற்றின் ஊடே ஒரு அழு குரல், என்னை சற்று நிறுத்தியது. அது உன் குரல். ஓ !!... ஏன், ஏன் அழுகிராய் ... என்னிடம் பேசிக்கொண்டிருந்த தோழியை கிட்டத்தட்ட தள்ளியேவிட்டேன், பதற்றத்தில். நீ முட்டியிட்டு, அழுதுகொண்டே வந்தாய்.. ஏன் அழுகிறாய் என யோசனையில் ஒரு அடி எடுத்து வைத்து அப்படியே நின்றேன்.
என் மனதில் ஒரு சிரு கேள்வி. நீ எங்கு, யாரை நோக்கி போகிறாய் என ... இந்த கூட்டத்தில் , உன் அப்பா, அத்தை, பாட்டி என உனக்கு பிடித்த அனைவருமே வந்தவரை உபசரித்தபடி இருக்க, யாருமே நீ அழுவதை அந்த ஒரு வினாடி கவனிக்கவில்லை, கவனிக்கவும் கூடாது என் வேண்டிக்கொண்டேன். யாரை நீ தேடுகிறாய் என நான் பார்க்கவேண்டும்! ... என் மனம் கல் என கூட நீ நினைக்கலாம். அழும் உன்னை முதலில் கண்டது நான் தான், ஆனால், அந்த ஒரு வினாடியில் கூட என்னில் ஒரு போராட்டம், ஓர் அற்ப ஆசை, நீ என்னிடம் வரவேண்டும், நீ என்னை தேட வேண்டும் என!
அடுத்த இரு வினாடியில், நீ என் கால்களைத் தொட்டாய். மெதுவாக என் கால்களைப் பிடித்து பிடித்து எழுந்து நின்றபடி என்னை அன்னார்ந்து பார்த்தாய். உன் அழுகை நிற்க்கவில்லை இன்னும். நான் உன்னை தூக்க வேண்டும் எனும் ஏக்கம் உன் கண்களில்... நான் பூரித்துப் போனேன். உன்னை அள்ளி அனைத்துக்கொண்டேன். உன் அப்பா என் பக்கத்தில் தான் இருந்தார், ஆனால் நீ தேடி வந்தது என்னை தான். என் தோள்களில் சாய்ந்து இன்னமும் அழுதுகொண்டு தான் இருந்தாய். ஏன்..? எதனால் ? என எனக்கு தெரியவில்லை! அதைப்பற்றி கவலையும் இல்லை ! ... யார் அல்லது எந்த காரணமாக இருந்தாலும், அதற்கு நன்றி... என் மகன் என்னை மட்டுமே தேடி வர காரணமாக இருந்ததற்க்கு.
அன்று முதல், இன்று வரை நீ அதிகம் தேடுவது என்னை தான். என்னை மட்டும் தான். பல வேளைகளில் அது எனக்கு சிரமத்தை கொடுக்கும். சில சமயங்களில் தொல்லையாக இருக்கும்... சில வேளைகளில் ஒய்வில்லை, தூக்கமில்லை என பிதற்றவைக்கும்.
ஆனால் உண்மையென்னவோ என் மனம் அதை...அதை மட்டுமே விரும்புவது தான் !
.

No comments:
Post a Comment